Thursday, September 7, 2017

"நீட்" (NEET) குறித்த ஓர் நீண்ட பதிவு

2007ல் பொறியியல் நுழைவுத் தேர்வு முறை நீக்கப்பட்ட போது ஏற்கனவே பொறியியல் படித்து முடித்திருந்த நான் அதை எதிர்த்தேன். அப்போது என் மனதில் இருந்த எண்ணங்கள் வேறு. நான் இக்கட்டான குடும்ப சூழலில் இருந்து 12ஆம் வகுப்பு படித்தவன். என் கையெழுத்து சரியிருக்காது. மனப்பாடத் திறன் குறைவாகப் பெற்றவன். ஆகவே இயல்பாகவே எனக்குப் பொதுத் தேர்வில் மதிப்பெண் கிடைப்பது கடினம். குறிப்பாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உயிரியல்த் தேர்வை நான் சிறப்பாக எழுதியிருந்தேன். 198 மதிப்பெண்களுக்குச் சரியான பதில்களை எழுதியிருந்தேன். ஆனால் வந்த மதிப்பெண்களோ 168. 

எப்படியும் மருத்துவம் படிக்கப் போவதில்லை என்று முடிவானதால் நான் மறுதிருத்தம் கோரவில்லை. ஆனால் சில ஆசிரியர்களின் கூற்றுப் படி என் தேர்வெழுதும் விதமே சரியில்லையாம். நான் எதையும் மனப்பாடம் செய்து எழுதியதில்லை. சொந்த நடையில் மட்டுமே எழுதுவேன். ஆனால் அவர்கள் கூற்றுப்படி புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதுபவனும் நானும் சமமல்ல. அவன் கண்டிப்பாக என்னைவிட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறினார்கள். அது எனக்கு நெருடலாக இருந்தது. 

ஆனால் நுழைவுத்தேர்வு முடிவுகள் வந்தபோது என்னோடு பயிற்சி வகுப்புகளுக்கு (கோச்சிங் கிளாஸ்) வந்து என்னைவிட அதிகப் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இதில் அவர்களுக்கும் எனக்கும் ஒரே பள்ளி, ஒரே யிற்சி வகுப்பு. ஆனால் அவர்கள் பொதுத்தேர்வில் என்னைவிட மிக அதிக மதிப்பெண்கள். நான் அவர்களைவிட நுழைவுத்தேர்வில் பல மதிப்பெண்கள் அதிகம். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை நுழைவுத்தேர்வு இல்லாதிருந்திருந்தால் நான் படித்த கல்லூரியும் பிரிவும் எனக்குக் கிடைத்திருக்காது. நிற்க... 

ஆகையால் 2007ல் நுழைவுத் தேர்வை ஆதரித்து போல் இப்போதும் நீட்டை ஆதரிப்பேனா? இல்லவே இல்லை. எனக்கு யிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியர் விருப்ப ஓய்வு (VRS) வாங்கிவிட்டு சொந்தமாகப் பள்ளி கட்டியதும் அந்த கோச்சிங் நிறுவனம் சொந்தமாகப் பொறியியல் கல்லூரியே கட்டியதும் நினைவிருக்கிறது. அது அப்போது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அது எவ்வளவு பெரிய சுரண்டல் என்றும் பணக்காரர்கள் மட்டுமே மேலேற உதவும் கட்டமைப்பு என்றும் புரிகிறது. என்னதான் செய்வது?

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்தது போலவும், அதற்க்கு முன் இருந்த மெட்ரிக் கல்வி முறையும் தற்போது பரவிவரும் சி.பி.எஸ்.சி. கல்வி முறையும் எதோ சர்வதேசத் தரத்தில் இருப்பதுபோலவும் பலரும் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது என் தந்தை அப்புத்தகங்களில் இருந்த குறைகளை ஆராயும் குழுவில் இருந்தார். அதற்க்கு முன் இருந்த மாநிலக் கல்வித்திட்டத்தோடு ஒப்பிட்டால் சமச்சீர் கல்வி பன்மடங்கு மேம்படுத்தப் பட்டுள்ளதாக 33 வருட ஆசிரியப் பணி அனுபவம் உள்ள அவர் சொன்னார்.

பிறகு நானும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பாடநூல் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். உண்மையில் நான் பயின்ற பாடத்திட்டத்தைவிட மிகச் சிறந்த முறையில் படங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன. அப்படியே அந்தத் திட்டம் சரியில்லை என்று கருதுபவர்கள் சற்றேனும் அறிவு நாணயம் உள்ளவர்களாக இருந்தால், பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த சமச்சீர் கல்வி முறையையே வேண்டாம் என்கிறார்கள். 

இங்குதான் "உள்குத்து" உள்ளது. அதுவரை பணக்காரனுக்கு ஒரு கல்வித்திட்டம் (மெட்ரிக்) ஏழைக்கு ஒரு கல்வித்திட்டம் (மாநிலக் கல்வித்திட்டம்) என்று இருந்த முறை நீக்கப்பட்டு அனைவருக்கும் சமமான கல்வி என்ற சமூக நீதி இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இதுநாள்வரை நவீன வர்ணாஸ்ரமமாக நிலவிவந்த கல்விப் பாகுபாடு இல்லாமல்போனது இவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. இதை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.

மேலும் கல்வித் தந்தைகளும், கல்வி வள்ளல்களும், கட்டிவைத்திருக்கும் பள்ளிகளில் "சிறப்புக் கட்டணம்" வசூலிக்க அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் (selling point) "எங்கள் கல்வித்திட்டம் மேலானது". இன்று சமச்சீர் கல்வியில் அந்த வாதம் தவிடுபொடியாகிவிட்டது. ஆகையால் அவர்களுக்கும் "வியாபாரம்" படுத்துவிடுமோ என்ற கவலை. இப்படி அவனவனுக்கு அவனவன் கவலை.

ஆகவே இன்று NEET போன்ற சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு சமச்சீர் கல்வியின் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் அற்பவாதிகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். பாடப்புத்தகத்தை மனனம் செய்து அப்படியே கக்குவது தவறான ஒரு கல்வி முறையினால் வருவது அல்ல. அது தவறான தேர்வு மற்றும் திருத்த (evaluation) முறையினால் வருவது. இதேபோன்ற சூழலை எல்லாக் கல்வி முறையிலும் கொண்டுவர முடியும். ஆகவே சமச்சீர்க் கல்வித் திட்டத்தை மாற்றவேண்டியது இல்லை! அதில் உள்ள தேர்வு முறையையும் விடைத்தாள் திருத்தும் முறையையும் மாற்றினால் போதும்.

குறிப்பாக புத்தகத்தில் உள்ள கணக்குகள் எண்கள்கூட மாறாமல் வினாத்தாள்களில் வருவது, அப்படியே புத்தகத்தில் உள்ளதை எழுத்துக்கு எழுத்து எழுதுவது போன்ற வகையில் தேர்வுகள் இல்லாமல் படித்ததை புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் நம் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். இது ஒன்று மட்டுமே போதும். நல்ல புரிதலும், சிந்திக்கும் திறனும் உள்ள மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெறும்படி தேர்வுமுறை இருக்கும்போது தனித்தனி நுழைவுத்தேர்வுகள் நடத்தவும் தேவை இருக்காது.

மருத்துவ நுழைவுத் தேர்வு என்று தனியாக ஒன்று இருப்பது எதற்கு? ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரால் பாடம் எடுத்து, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்தானே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்? அப்படி இருக்க அதற்க்கு எதற்கு ஒரு தனி நுழைவுத்தேர்வு? இத்தகைய தேர்வுகள் இதை வைத்து பயிற்சிவகுப்பு நடத்தி காசுபார்க்கும் கயவர்களுக்கும், ஆறாம் வகுப்பிலிருந்தே தன்பிள்ளையை பல லட்சம் கட்டிப் பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் ஆண்டைகளுக்குமே உதவும். இதனால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும்?

அப்படியென்றால், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, மருத்துவக் கல்லூரியில் உள்ள தேர்வுகள் எல்லாம் வடிகட்டாத ஒரு தகுதியற்ற மாணவனை இந்தத் தகுதித்தேர்வு மட்டும் மந்திர வித்தை மூலம் கண்டுபிடித்துவிடுமா? அப்படி என்ன அந்தத் தேர்வு செய்கிறது? இதுவரை விண்டோஸ் 8 பயன்படுத்திவந்தவரிடம் விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கணினியைக் கொடுத்துப்பாருங்கள். அவர் திணறிப் போவார். அதானால் விண்டோஸ் 8 இயங்குதளம் எக்ஸ்.பி இயங்குதளத்தைவிடத் தரம் தாழ்ந்ததாகிவிடுமா? அதுபோலவே உள்ளது இவர்கள் வாதமும். ஒருவன் 12 வருடங்கள் படித்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்காமல் வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் அது எப்படி நியாயம்?

இப்படி NEETக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவிகளிடம் இதை மட்டும் கேளுங்கள். "வெளிநாடுகளில் மேற்படிப்புப் படிக்க அந்த நாட்டு மொழிகளில் தகுதித்தேர்வு எழுதுவது போல, தமிழகக் கல்லூரிகளில் படிக்க வரும் அனைவரும் தமிழிலும் தகுதித்தேர்வு எழுதித் தேறி இருக்கவேண்டும் என்று சொன்னால் ஏற்பீர்களா?" என்று. இந்த நவீன-தீண்டாமைவாதிகள் ஒன்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் அல்லது நம்மை தேசத் துரோகி என்று உச்ச சுதியில் கத்துவார்கள். ஆகையால் தரம் உயர்த்துவது, சம உரிமை போன்ற NEET  ஆதரவு வாதங்கள் எல்லாம் சற்று உற்று நோக்கினால் தரைமட்டமாக விழுந்துவிடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறேன். மருத்துவம் மட்டும் அல்ல. எந்தப் படிப்பும் படிப்பதற்கு தேர்ச்சி ஒரு தகுதியாக இருக்கலாமே ஒழிய, மதிப்பெண்கள் ஒரு தகுதியாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவன் குடும்பத்திலும் ஒவ்வொரு துன்பம் இருக்கும். வெகுசிலரே கவலைகள் இல்லாமல் பள்ளி/கல்லூரிகளுக்கு வருகின்றனர். அப்படி இருக்க ஒரே ஒரு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் அவர்களின் தகுதியாகிவிடுமா? அம்மா அப்பா திட்டுவார்கள் என்று நல்ல மதிப்பெண் எடுப்பவர்களே இங்கு அதிகம். இந்தப் படிப்பை நீ படித்தால்தான் எனக்கு கெளரவம் என்று பெற்றோர் தரும் உளவியல் அழுத்தத்தால் மதிப்பெண்களைக் குறிவைத்துப் படிப்பவர்களும் ஏராளம். பந்தயக்குதிரை போல வெறும் முதலிடத்தை இலக்காக வைத்துப் படிப்பவர்களும் உண்டு. இவர்களில் யாருமே ஒரு நல்ல மருத்துவராகவோ, நல்ல பொறியாளராகவோ, நல்ல ஆசிரியராகவோ ஏன் நல்ல மனிதனாகவோகூடத் தகுதியற்றவர்கள்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்றவுடன் செலவு செய்த காசை மீட்டெடுக்க ஊழல் செய்யும் அரசியல்வாதிபோல, சிறப்புவகுப்புகளுக்கும் (ட்யூஷன்), பயிற்சி வகுப்புகளுக்கும் பல லட்சம் கட்டிப் படித்தவன் பட்டம் வாங்கியவுடன் வெளிநாட்டுக்குப் பறக்கவோ, பெருநகரங்களில் செல்வம் கொழிக்கும் மருத்துவமனைகளில் பணிபுரியவோ, மருத்துக் கம்பெனிகளின் லாப வெறிக்குத் துணைபோகவோ, உடல் உறுப்புகளைத் திருடி விற்கவோ மாட்டான் என்று எப்படி நம்புவது?

அதுவே சிறுவயதுமுதல் ஆசையின் காரணமாகவோ, ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவத்தின் காரணமாகவோ ஒரு துறை மீது ஈடுபாடு வந்து, அதனால் அந்தத் துறையில் படிக்க விரும்பும் ஒருவனுக்கு வாய்ப்புக்கொடுப்பதே சரியானதாக இருக்கும். இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட எத்தனையோ அறிவாளிகள் இன்று கிடைத்ததைப் படித்துவிட்டு வேண்டாவெறுப்பாக வேலைபார்க்கிறார்கள். இதுதான் ஆர்வத்திற்கு திறமைக்கும் கிடைக்கும் மரியாதையா? பள்ளிகளில் சுமாராகப் படிப்பவர்கள் கல்லூரிகளில் நன்றாகக் படிப்பதும் இதுவே தலைகீழாக நடப்பதும் யாரும் அறியாததல்ல. அப்படி இருக்க 8.5 லட்சம் பேர் எழுதும் தேர்வில், மாநில அளவில் முதல் 1000 இடங்கள் எடுத்தால் மட்டுமே நல்ல கல்லூரிகளில் நினைத்த துறையில் கல்வி என்றால் இதுவே ஒரு வக்கிரமான அமைப்பு இல்லையா?

ஆகவே விருப்பம் இருப்பவன் விரும்பும் படிப்பைப் படிக்க வகைசெய்ய வேண்டும். "இதனால் எல்லோரும் மருத்துவம் படித்துவிடுவார்கள்" என்று நினைக்கிறீர்களா? அதுவும் நடக்கலாம். ஆனால் அதைத் தடுக்க ஒரு வழியுண்டு. எல்லா வேலைகளுக்கும் இருக்கும் வருமான இடைவெளியை (pay gap) நீக்குவதன் மூலம், "இந்தப் படிப்பு படித்தால் நிறய சம்பாதிக்கலாம்" என்ற எண்ணம் முதலில் நீக்கப்பட வேண்டும். இதுவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம். இதைச் சொன்னால் நம்மை கம்ம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதுபோன்ற சமதர்மம் நிலவும் நாடுகளுக்கு ஆன்சைட் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும் மேன்மக்களே இங்கு அதே சமதர்மம் வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்.

சரி, தற்போதுள்ள முதலாளித்துவ முறையில்கூட இது எப்படி இயங்கும்? எல்லோரும் மருத்துவமோ, பொறியியலோ படித்தாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படாது. தெருவுக்குத் தெரு மருத்துவர்களும் பொறியாளர்களும் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார்கள். நாளடைவில் தானாக எந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருகிறோதோ அந்தத் துறையில் அதிக மாணவர்கள் சேர்வார்கள். இதைத்தானே நீங்கள் "Free Market Capitalism" என்று பீத்துகிறீர்கள்? அதைக் கல்வியிலும் கொண்டுவரலாமே? வேண்டிய படிப்புகளை வேண்டியவர்கள் படிக்கட்டும். அவர்கள் பார்க்கும் வேலையின் தரத்தைப் பொறுத்து அவர்கள் தொழில் முன்னேற்றம் இருக்கட்டும்! வாய்ப்பு மறுக்கப்படுவதுதான் உங்கள் "Free Market Capitalism" லட்சணமா?

எதற்க்கெடுத்தாலும்  "survival of the fittest" என்று டார்வீனியாக் கோட்பாடு பேசுகிறார்கள். நான் பரிணாமக் கோட்பாட்டை நன்றாகக் படித்தவன். "Survival of the fittest"-க்கு இவர்கள் சொல்லும் விளக்கம் எந்த நூலிலும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்து எப்படியும் தான் ஆசையை நிறைவேற்றிக்கொள்வது "survival of the fittest" இல்லை. அதற்குப் பெயர் "unethical cut-throat competition". முதலாளித்துவமும் இங்கு நிலவும் சாதிய சமூகமும் உருவாக்கியுள்ள இந்த மனநோயைத்தான் இவர்கள் "survival of the fittest" என்று பூசி மொழுகுகிறார்கள்.

அனிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை. 1176 எடுத்த காரணத்தால் அல்ல. அனிதா 800 மதிப்பெண் எடுத்திருந்தாலும் அவர் மருத்துவர் ஆக எல்லாத் தகுதியும் பெற்ற ஒருவர். எப்படி? மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மருத்துவத்திற்கு காசில்லாமல் தன் தாயைப் பறிகொடுத்த அனிதாவைவிட யார் மருத்துவராகத் தகுதி உள்ளது? அவர் மருத்துவர் ஆகியிருந்தால் எல்லோருக்கும் இலவச சேவை செய்வார் என்று சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காசு கொடுத்து இடம் பிடித்த "survival of the fittest"களைக் காட்டிலும் கருணையும், சமூக அக்கறையும் உள்ள மருத்துவராக இருந்திருப்பார். அது எவரும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு வேண்டுமானால் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பெரிய பெரிய தகுதித் தேர்வுகள் எழுதிவந்த மருத்துவர்கள் தேவைப்படலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு அனிதாவைப் போன்ற மனசாட்சியுள்ள, எல்லா நோயாளிகளையும் மறைந்த தன் தாயாகப் பார்க்கும் மருத்துவர்களே தேவை. அப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்கமுடியாத சமூகம்தான் தூக்கில் தொங்கவேண்டும்.

முடிவாக
  • நீட் விலக்குப் பெறுதல் தாற்காலிகத் தீர்வு.
  • நீட்டை நீக்குவது குறுகிய காலத் தீர்வு.
  • விரும்பியவர் விரும்பிய படிப்பை விலையில்லாமல் படிக்கவும், தொழில்களிடையேயும் தொழிலாரகளிடமும் சமத்துவமும் சமநீதியும் நிலவ வழிசெய்யும் பொதுவுடைமைச் சமூகம் படைப்பதே நிரந்தரத் தீர்வு!