Tuesday, June 27, 2017

குறுக்கும் நெடுக்கும்

மின்தூக்கிகள் (lift) நம் வாழ்வில் ஆடம்பரங்களில் ஒன்றாக இருந்து தற்போது அத்தியாவசியமாக மாறிக்கொண்டுள்ளன. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்க அடுக்கடுக்காக மாடிகளைக் கட்டிக் கொண்டே போகிறோம். வானளாவிகளின் (skyscrapers) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஓரிரண்டு மாடிகள் என்றல் படிகளில் ஏறலாம். பத்துப் பதினைந்து மாடிகள் என்றல்? மேலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் என்று படிகளில் எற முடியாதவர்களும் உண்டல்லவா? ஆகவே மின்தூக்கிகள் நமக்கு இன்றியமையாத ஒன்றாகின்றன.


நான் சிலகாலம் முன் ஒரு பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு மின்தூக்கிகள் இருந்தன. ஆனால் மின்தூக்கி நம்மை இறங்கிவிடும் இடத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்திற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. காரணம், உயரத்தில் மட்டுமல்ல, அகலத்திலும் அந்தக் கட்டடம் பெரிது. இதுபோன்ற சூழல்களில் மின்தூக்கி மட்டும் போதாதாதல்லவா? மேல்/கீழ் நோக்கி மட்டும் செல்லும் மின்தூக்கியாக இல்லாமல் பக்கவாட்டிலும் செல்லும் "மின்நகர்த்தி"யாக இருந்தால் எப்படி இருக்கும்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன்க்ரப் (ThyssenKrupp) என்ற நிறுவனம் அப்படி ஒரு மின்நகர்த்தியை வடிவமைத்துள்ளது. அதற்க்கு "மல்டி" (The Multi) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


பொதுவாக மின்தூக்கிகள் கம்பியின் (cable) மூலமே மேலும் கீழும் இழுக்கப் படும். ஆனால் "மல்டி"யில் எந்தக் கம்பியும் கிடையாது! பின்பு எப்படி அது நகரும் என்று யோசிக்கிறீர்களா? ஜப்பானில் ஓடும் காந்தமிதவுந்தில் (Maglev Train) பயன்படுத்தப்படும் காந்தமிதவுத் (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. காந்தப்புலத்தின் உந்தலால் மின்நகர்த்தி அந்தரத்தில் மிதக்கிறது. பின்பு மின்-காந்தப்புலத்தில் செய்யப்படும் மாற்றத்தால் அது குறிப்பிட்ட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கம்பிகள் பளு தாங்காமல் அறுந்து போவது, உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் மின்தூக்கிகள் போல் மேலும்/கீழுமாக மட்டும் அல்லாமல் இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் பக்கவாட்டிலும், குறுக்குவாட்டிலும்கூடப் பயணிக்கக்கூடியவை. இதனால் நேரம் மிச்சமாவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களும் பெருமளவு குறையும்.

இதுகுறித்து தைசன்க்ரப்பின் முதன்மை செயல் அலுவலர் (CEO) ஆன்ட்ரியாஸ் ஸ்கைரென்பெக் (Andreas Schierenbeck) கூறுகையில் "500 டன் எடைகொண்ட தொடர்வண்டியை 500 மணிக்கு கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றால், 500 அல்லது 1000 கி.கி. எடைகொண்ட பெட்டியை நொடிக்கு 5 மீட்டர் நகர்த்த முடியாத என்ன!" என்றார். இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்தூக்கிகள் போல 3 முதல் 5 மடங்கு வரை விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்தூக்கிகள் கம்பிகளின் பளுதாங்கும் திறன் காரணமாக குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பயன்படுத்த முடியாது. ஆனால், காந்தமிதவு மின்நகர்த்திகள் அதிஉயரக் கட்டடங்களில்கூடப் பயன்படுத்தலாம்.

3 comments:

artist said...

ur writings are very good. can u write about nptel online courses(https://onlinecourses.nptel.ac.in/explorer) in tamil? it helps in taking this to TN studs.only a very small % of them are in iits.
of course this is just a request of mine. no compulsion.

David S said...

Sure. I will write.

David S said...

I have written about the same here: http://techmusicnmore.blogspot.in/2017/06/blog-post_29.html