Friday, June 2, 2017

ஈசல் வறுவல்!

கேட்டாலே சிலருக்கு பிரட்டிக்கொண்டு வரலாம்... எப்படி சிலருக்குப் பன்றிக்கறி பற்றிய சிந்தனையே ஒவ்வாத ஒன்றோ, எப்படி சிலருக்குக் கருவாட்டு வாடையே ஆகாத ஒன்றோ, எப்படி சிலருக்கு வெண்டைக்காயே வேண்டாத ஒன்றோ, அப்படி பழக்கம் இல்லாதவருக்கு, இதுவும் அறுவோறுப்பாகவே இருக்கும். ஆனால், பிறந்ததில் இருந்து வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் ஈசலை உணவாகப் பார்த்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது எதார்த்தமான உணவே! இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் ஈசல் சாப்பிடவேண்டும் என்பதல்ல. உணவுப் பழக்கங்கள், இடம்தோறும், காலம்தோறும், கலாச்சாரந்தோறும் மாறும் ஒன்று. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது மற்றவருக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்றாகவும், உங்களுக்கு கேட்கவே சகிக்காத ஒன்று மற்றவர் நாக்குக்கு சுவையானதாகவும் இருக்கலாம். உங்கள் உணவை அவர் வாயிலும், அவர் உணவை உங்கள் வாயிலும் திணிக்காத வரையில், யாரும் வாந்தி எடுக்கத் தேவை இல்லை. உங்கள் உணவை உங்கள் வாயிலிருந்தும், அவர் உணவை அவர் வாயிலிருந்தும், பிடுங்காத வரை, யாரும் ஆத்திரப்படவும் தேவையில்லை.

எப்படிப் பிடிப்பது?

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்களை பார்க்காதவர்கள் வெகு சிலரே! இன்று நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக கீழே அதன் படத்தை இணைத்துள்ளேன். முதலில் நீங்கள் பிடிக்கும் ஈசல் உண்ணத்தகுந்ததா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்பது நல்லது. ஈசல் என்று பறக்கும் எறும்புகளை பிடித்த சிறுவர்களையும் என் இளம் வயதில் கண்டதுண்டு. பெரும்பாலும் மாலை நேரமே ஈசல் வேட்டைக்கு உகந்தது (அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும்). அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.
நன்றி: விக்கிமீடியா
ஒரு சொம்பு அல்லது தம்பளரில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால் பிடிக்கவும். பயம் வேண்டாம்... அவை உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை! பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும். சிறிது நேரத்தில் பாத்திரம் நிரம்பி விடும். பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ அல்லது சொளவிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். ஒன்றிரண்டு ஈசல்கள் நடந்து தப்ப முயலலாம்! மறுநாள் வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில் காயவிடவும். காய்ந்தபின் லேசாகப் பரசி சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல இருக்கும்.

எப்படிச் சமைப்பது?

அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில் மிதமான சூட்டில் வறுக்கவும். கலகலவென நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும்! குளிர்கால மாலைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.

சிலர் (நானும்கூட) ஈசல்களைப் பிடித்தவுடன் பச்சையாக உண்பர். சமைக்காத நிலையில் அதன் சுவை, பால்க்  கருது (சோளம்) போல இருக்கும். பச்சை(சமைக்காத) ஈசல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், அதற்குமுன் அது ஏதாவது அசுத்தமான இடங்களில் அமர்ந்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆகவே சமைத்து உண்பது சாலச்சிறந்தது!

புறநானூற்றில் ஈசல் உணவு!

சில வருடங்கள் முன்பு, தமிழாசிரியரான என் தந்தை புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் 119-வது பாடலில் ஈசல்களை மோருடன் சேர்த்துப் புளிச்சாறு (புளிச்சோறு கிண்டப் பயன்படுவது) தயாரித்ததாகக் குறிப்புள்ளதை எனக்குச் சொன்னார். இப்படியும் ஈசலை சமைக்க முடியுமா?!? ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்! தற்போது நகரத்தில் வாழும் எனக்கு வாய்ப்பிருக்கும் போது இதை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

குறிப்பு: இந்த இடுகை 2010ஆம் ஆண்டு வேறு ஒரு வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் சில மாறுபாடுகள் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

No comments: